சனி, 26 பிப்ரவரி, 2011

வருத்தம்

வருந்தத் தக்க
காரியத்தை நீ செய்ததால்
வருத்தப்பட்டு நிற்பது நான்தான்.

பாதிக்கப்பட்டது நான்தான்
என்பதாலோ என்னவோ..
என்னால் வருந்தத்தக்கப்படும்
நபர் நீ தான் என்பதை நான் குறிப்பிடுவதும்
சற்றே வருத்தப்படவேண்டிய விஷயம் தான்.

உனக்கே - நீ என்னால் விரும்பப்படும் நபர் என்று
தெரிந்தும்கூட என்னை கவனியாமல் சென்றதில் கூட
எனக்கு சற்றே வருத்தம் தான்.

டிஸ்கி:
நான் என்ன சொல்றேன்னு எனக்கே புரியாமல் போவது கூட
எனக்கு வருத்தம் தான்.

முடிவு என்பது எப்பவும் இல்லை..!!!

நான் நடந்தவற்றை மறக்கவில்லை..
என் மனதின் தூண்டுதலில் நடந்தன என்பதை நான் மறுக்கவுமில்லை..

என் காதல் உன் மனதை கரைக்கவுமில்லை..
நீ சொன்ன வார்த்தைகள் எனக்கு உரைக்கவுமில்லை..

மூடி வைத்த காதல் நெஞ்சம் விட்டு இறக்கவில்லை..
முடிந்து போன காதல் கண்டு நான் இறக்கவுமில்லை..

நீ இல்லாத வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை..
மீண்டும் நீ வரக்கூடும் என்பதால் இதை முடிக்கவுமில்லை..

இப்படியும் நடக்காதா

நீ எனைப்பார்த்து பிறந்தநாள் வாழ்த்துக்கூற
என் வீட்டு வாசலில்
அதிகாலையே பூச்செண்டோடு கால் கடுக்க
காத்துக்கிடந்தாய் - நான் கவனிக்கத்தவறிவிட்டேன்.

ஏதேச்சையாக வாசல் பார்த்தபோது
என் வாழ்வின் வசந்தம் நிற்பதைப் பார்த்து
பதறிப்போனேன்.

உன் அருகில் நான் வந்தபோது,
உன் விழிகளில்
உற்சாகம் பிறக்கவில்லை - மாறாக
உணர்ச்சிவசப்பட்டு உன் கண்களில் நீர் வழிந்தது

நீ கொடுத்த பூக்கள் மிகவும் பிடித்திருந்தது.
நான் நன்றாக உணர்வேன்
உலகில் மிகவும் கடினமான காரியம்
உயிருக்குயிரானவருக்கு பிடித்த பரிசை
தேர்வு செய்வதுதான் என்பதை..

என் சித்தம் சிலாகித்தது
நீ எவ்வளவு சிரமப்பட்டிருப்பாய் என்று

சாதாரணமான விஷயத்திற்காக
இவ்வளவு சிரமப்படவேண்டுமா என்று
உன்னை கடிந்து கொண்டேன்.

ஏதேதோ சமாதானம் செய்தேன் - நீ
அழுகையை நிறுத்துவதாய் இல்லை.
நான் தான் இருக்கேனடா... என்றபடியே
உன் முகத்தினை என் நெஞ்சோடு புதைத்துக்கொண்டேன்
நீ லேசாக புன்னகைத்தாய்.

மேற்கொண்டு உன் மலர்ந்த முகம் பார்க்க
உன் மோவாயை உயர்த்தியபோது...

எழுந்தரிடா எருமை என்று
என் அம்மா கத்தியவுடன் தான் புரிந்து கொண்டேன்
இவ்வளவு நேரம் நடந்தது கனவு என்பதை.

....ச்சே என்ன கொடுமை சரணவன் இது ??

புண்ணியம் செய்தோர்

உன் விழிகள் என்ன மந்திர வாசலா
காண்பவரெல்லாம் காணாமல் போவதற்கு
நீ கண்டு பேசியவர்க்கெல்லாம் சொர்க்கம் கிட்டும்
பேசாதவர்கள் - புண்ணியம் செய்தவர்
அவர்கள் மீண்டுமொறுமுறை உயிர்த்து
உன்னிடம் பேச காத்து நிற்பர்.

யார் நீ

நீயாக இதயத்தைக் கொடுப்பதாய் இல்லை
நான் பிடுங்கிக்கொண்டேன்.
நீயாக என் கனவுகளைத் தருவதாய் இல்லை
நான் திருடிக்கொண்டேன்.
கள்வன் நான் தான்
கண்டித்துவிடாதே கடைசிவரை
உன்னோடு இருக்க ஆசை.

அழுமூஞ்சி இவனை கட்டிக்கொண்டு
எப்படித்தான் காலம் தள்ளப்போகிறோமோ
என்று கூட நீ எண்ணியிருக்கக்கூடும்
தவறான முடிவு எடுத்துவிட்டோமோ
என்றும் நீ தவிக்கக்கூடும்.
இருப்பினும்
எதுவானாலும் உன் விருப்பம் என்று
எப்போதோ முடிவு செய்து விட்டேன்.
ஆனால் எனக்குத்தான் பிரிய விருப்பமில்லை.

முப்பத்தியிரண்டு வருடமாக எவ்விதப்பிடிப்பும்
இன்றி - ஓர் உன்னத வாழ்க்கை
தொடங்கும் வேளையில் ஏகப்பட்ட முரண்கள்.
காணவேண்டுமென்ற ஆசை அவ்வப்போது
வந்தாலும் கடைசியாக பேசிய
‘பிடிக்கவில்லை’
என்ற ஒரு வார்த்தை குறுக்கே நிற்கிறது.

தினம் தினம் ஏதாவதொரு அன்பான வார்த்தை
வராதா என்றெல்லாம் எண்ணி - கைப்பேசியை
குழந்தைபோல் பாவிக்கிறேன்.
நீ என்னடா என்றால் உன்னை
எப்போதோ மறந்துவிட்டேன்...
யார் நீ என்கிறாய்.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

அதை மட்டும் திருப்பிக்கொடு


ஒவ்வொரு முறையும்
மறக்கத்தான் நினைக்கிறேன்
கன்னங்களில் வழியும் கண்ணீரை
துடைத்த பின்…

காதலை எந்த
வடிவில் கண்டாலும்
மறுபடியும் கண்ணீர்
வருவதை ஏன் என்னால்
தடுக்க முடிவதில்லை?

மெமரி கார்டில்
என்னை அழித்துவிட்டாய்
என் மெமரியை
என்ன செய்ய முடிந்தது உன்னால்?

யாருக்கெல்லாமோ கால் செய்தேன்
உனக்கு மட்டுமே காதல் செய்தேன்.
கால் கொண்டு எட்டி உதைத்தாய்
அட, எட்டி உதைத்தாலும்
உன்னிலே ஒட்டிக்கொள்ளும்
ஒட்டுண்ணியாய்
வேடிக்கை காட்டுகிறது பார் என் காதல்.

நீ வாழ தொடங்கிவிட்டாய்
உன் வாழ்க்கையை..
அதில் தவறேதும் இல்லை
என் வாழ்க்கையையை
ஏன் என்னிடம் தர மறுக்கிறாய்?

எடுத்துக்கொள் என்று
இயல்பாக சொல்கிறாய்.
வர மாட்டேன் என
அடம்பிடிக்கும் இதயத்தை
சிலுவையிலா அறைய முடியும்?

அதுவும் சரிதான்.
நேற்று என் இதயத்தை
சிறையில் வைத்தாய்
இன்று சிலுவையில்....

எப்போதும் இல்லாமல்
விழித்திரை இப்போதெல்லாம்
அதிகநேரம் வேலை செய்கிறது.
தூக்கத்தை விடவும்
துடிப்பதைதான் அவைகள் அதிகம்
விரும்புகின்றன போலும்.

கண்ணில் விழுந்த தூசியை
முன்பெல்லாம் ஊதி எடுத்தாய்.
இப்போதெல்லாம் ஊசி கொண்டு
எடுக்கிறாய்..

எத்தனை காதல் கடந்து வந்தாலும்
உன் இதயம் மட்டும்தான்
என் காதலுக்கான தாஜ்மகால்.


அங்கே எனக்கு
பள்ளியறை வேண்டாம்
கல்லறையாவது
கட்டிக்கொள்ள அனுமதி கொடு


இறக்கவும் விடவில்லை
இருக்கவும் விடவில்லை
என்னதான் வேண்டுமாம்
உன் நினைவுகளுக்கு?


நான் கொடுத்த எல்லாவற்றையும்
திருப்பி கொடுத்தாய்...

ஒன்றைத்தவிர..
அதை மட்டுமாவது
திருப்பிக் கொடுத்துவிடு.


திருப்பிக்கூட தரவேண்டாம்
ஒரே ஒரு முறை
கண்ணிலாவது காட்டிப்போ..
நீண்டநாள் ஆகிவிட்டது அதைப்பார்த்து..
ஆம். அனைவரும்
என்னிடம் கேட்கிறார்கள்.

தயவுசெய்து
தவணை முறையிலாவது
எனக்கு காட்டு

என் சிரிப்பை..
--------------------------------------------
என் மனதின் இந்த வலியை உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் என் நண்பர் http://kavithaikadhalan.blogspot.com/2011/02/blog-post.html வெளிக்கொனர்ந்தமைக்கு - அவருக்கு மிக்க நன்றி

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

சிரிப்பு வருதா என்ன???

இது நம் இந்திய அரசியல்வாதிகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய மெட்ரிக் அளவீட்டுக்கான வாய்ப்பாடு...

100 கோடி = 1 எடியூரப்பா

100 எடியூரப்பா = 1 ரெட்டி

100 ரெட்டி = 1 ராடியா

100 ராடியா = 1 கல்மாடி

100 கல்மாடி = 1 பவார்

100 பவார் = 1 ராஜா

100 ராஜா = 1 கருணாநிதி

100 கருணாநிதி = 1 சோனியா

********

மேலிருக்கும் அளவீடு மின்னஞ்சலில் வந்தது. அநேகர் படிச்சிருப்பீங்க...படிக்காதவங்களுக்காக இந்தப்பதிவு.

100 சோனியா = ????? வேண்டாம்பா வேண்டாம்...ஒரு சோனியாவுக்கே ஏகப்பட்ட மக்களைக் காவு கொடுத்துட்டோம். இன்னும் நூறு மடங்குன்னா, பூமி தாங்காதுடா சாமீ!!!!!!!!!!!!!........இது நொந்துபோன நம்ம தமிழினத்துப் பிரதிநிதி ஒருத்தரின் அலறல்

நன்றி - http://mazhimegam.blogspot.com/